நம் குரல்

Wednesday, March 18, 2015

தூங்கியவனை எழுப்பாதீர்கள்


தூங்கியவனை எழுப்பாதீர்கள் என்று சொன்னேன்
யார் காதிலும் விழவில்லை
அதோ அரைத்தூக்கத்தில் கண்களைக் கசக்கியவாறு
ஏதேதோ பேசுகிறான்

தூக்கத்திலேயே உளறுபவன்
இப்பொழுது கண்களைத் திறந்தவாறு செய்கிறான்

நீங்கள் காதுகளைக் கூர்மையாக்கிக்
அவன் பேச்சைக் கேட்டுப் பார்க்கிறீர்கள்
என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறோமா
என்று அவனுக்கே சந்தேகம்

அவன் சொற்களின்மீது கவனமில்லாதவன்
சொற்கள் மந்திரமாகும் மாயம் அறியாதவன்
சொற்களுள் சூல்கொள்ளும் சூட்சமம் புரியாதவன்
சொற்களுக்குள் சிக்கிக்கொண்டு விழிபிதுங்கியவன்
சொற்களில் இடறிவிழுந்து சிரிப்பைச் சம்பாதித்தவன்

அவன் உரைகளை அகழ்வாராய்ச்சி செய்யாதீர்கள்
யார்யாரோ எழுதித் தந்ததை வாசித்துக்காட்டுகிறான்
சொந்த வசனத்துக்கு அவனால் மெனக்கெட முடியாது

ஏதோ மந்திரங்களை உச்சரிக்கிறான் என்று
அவனுடன் இருப்போர்
காற்றில் வதந்தி பரப்புகிறார்கள்
அவை பயத்தின் உளறல் என்பது
அவனுக்கே வெளிச்சம்

சற்று முன் அவன் ஆவேசமாய்ப்
பொங்கியதைக் கண்டு பூரிக்காதீர்கள்
அவனை நெருங்கி இருப்பவருக்குத்தான்
தெளிவாகப் புரியும்
அவனின் ஞாபக மறதி வியாதி

தனக்கு ஆயிரம் கனவு இருப்பதாக
ஒலிபெருக்கியில் அறிவிக்கிறான்
அவை தூக்கத்தில் முகிழ்க்கும் கனவென்பது
அவன் அடிமனமும் அறியும்

அவன் கொட்டாவிவிட
வாயை அகலத் திறந்தால்
சிங்கம் கர்ஜிக்கிறது என
திரைக்கதை, வசனம் எழுதிக்கொள்கிறார்கள்

அவன் மீண்டும் தூங்கப் போகிறான்
அது அவனுக்கே தெரியும்
மாலைகளை அவன் தோளில் ஏற்றி
நீங்கள் வேறு போதையூட்ட வேண்டுமா?

அவன் தூங்கிய பிறகு
நீங்கள் துடித்தெழுந்து அழப்போகிறீர்கள்
பார்த்து ரசிக்க
நான் காத்திருக்கிறேன்

3 comments:

  1. வணக்கம்
    ஐயா
    சொல்லிய விதம் வெகு சிறப்பு ..... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தூங்கியவன் எழுந்து செய்யும் அட்டூழியங்கள் பொறுக்காமல் எழுதிய கவிதை இது. கவிதை வாசித்த உங்கள் இருவருக்கும் நன்றி!

    ReplyDelete