நம் குரல்

Sunday, September 12, 2010

எழுத்தாளர் ஜெயமோகனுடன் சந்திப்பு -2 வல்லினம் கலை இலக்கிய விழா











12.9.10 ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 6.30க்கு வல்லினம் கலை இலக்கிய விழா கோலாலம்பூர் டான்ஸ்ரீ சோமா அரங்கில் தொடங்கியது. ஜெயமோகனின் உரை கேட்க இலக்கிய ஆர்வலர்கள் திரளாக வந்திருந்தனர். தினேஸ்வரி அறிவிப்பில் மலர்ந்த நிகழ்வில் நான் வரவேற்புரை ஆற்றினேன் (என்னுரையை இதன் இறுதியில் காண்க).

டாக்டர் சண்முகசிவா தலைமையுரையாற்றினார். வல்லினத்தின் வருகையை இலக்கியத்தில் ‘மாற்று அணி’ நான் குறிப்பிட்டதைக் கூறி, வல்லினம் மாற்று அணி அன்று; அனைவரும் விரும்பி அணிய வேண்டிய அணி என்று கருத்துரைத்தார். “எழுத்தாளர்களுக்கு அறச்சீற்றம் வேண்டும். கருத்துக்களையும் எதிர்வினையையும் துணிச்சலோடு முன்வைக்கவேண்டும். வல்லினம் படைப்பாளர்களின் செயல்பாட்டைப் பாராட்டுகிறேன். ஆனால், வல்லினம் படைப்பாளிகளின் வட்டம் விரிவடைய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

வல்லினம் ஆசிரியர் மா.நவீன், ‘வல்லினம் மலேசியா-சிங்கை 2010’ இதழ் உருவான கதையை விளக்கினார். பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களிடம் தற்கால இலக்கியம் குறித்த சிந்தனை மிகவும் குறைவாக இருப்பதால் இந்த இதழ் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றார்.

சு.யுவராஜனும் சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி அவர்களும் ஜெயமோகனை அறிமுகம் செய்தனர். ஜெயமோகன் சில நிகழ்ச்சிகளில் ஒரு சினிமாக்காரராக மட்டும் அறிமுகம் செய்துவைக்கப்படும் நிலையை யுவராஜன் வேதனையோடு குறிப்பிட்டார்.

‘தமிழில் எழுதப்பட்ட முக்கிய நாவல்கள்’ என்ற தலைப்பில் ஜெயமோகன் உரையாற்றினார். ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டோய் எழுதிய ‘போரும் அமைதியும்’ நாவல் தமக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளையும் அதனுள் தான் கண்டடைந்தவற்றையும் விரிவாகக் கூறினார். மூன்று பாகங்களில் அமைந்த அந்நாவலைச் சிரமத்தோடு வாசிக்கத்தொடங்கினாலும் வரலாற்று பிரக்ஞையோடு உளவியல் தன்மைகளின் தொகுப்பாக அமைந்த அது, தமக்கு நாவல் குறித்த பல உண்மைகளை உணர்த்தியதாகக் கூறினார்.

“நாவல் வெறும் நீண்ட கதையாக மட்டும் அமைந்து விடாமல் பல்வேறு தன்மைகளின் தொகுப்புப் பார்வையாக இருக்கவேண்டும். வாசகனுக்கு ஒரு ஒட்டுமொத்த பார்வையைத் (தரிசனத்தை) தரவேண்டும். நெடுங்காலத்தைக் களமாகக் கொண்டிருக்கவேண்டும். ஒரு கண்ணில் யானையையும் மற்றொரு கண்ணில் சிறு எறும்பையும் காணும் நிலையில் எழுத்தாளன் இருக்க வேண்டும்.” ஜெயமோகனின் நாவல் குறித்த சிந்தனை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

அதன்பின் தமிழில் எழுதப்பட்ட சில முக்கிய நாவல்களைத் தொட்டுப் பேசினார்.
புளியமரத்தின் கதை, தலைமுறைகள், ஆழிசூழ் உலகு, காவல் கோட்டம் போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. அவரின் உரைக்குப் பின்னர், கேள்வி - விளக்கம் என மூன்று மணிநேரம் போனதே தெரியவில்லை. இலக்கிய நண்பர்கள் பலரையும் இந்த நிகழ்வில் சந்தித்துப் பேசியது மனத்திற்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்தது. இதற்கு வழியமைத்த வல்லினம் குழுவிற்கு நன்றி.

இலக்கியம் குறித்த உரையாடல்கள் நம்மிடையே மிகவும் குறைவு. பெரும்பாலும் பேசுவதற்கு நம் எழுத்துகளை அனுப்பிவைத்துவிட்டு நாம் மௌனமாக இருந்துவிடுகிறோம். “உள்ளங்கள் எல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில் தான் வெற்றி வாராதா?” என்று வாலி எழுதினார். இலக்கியத்திற்கு இந்த வரிகள் மிகவும் பொருந்தும். உரையாடல்கள், இலக்கியம் குறித்த ஆழமான புரிதலுக்கும் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் இட்டுச் செல்லும் என நான் திண்ணமாக நம்புகிறேன்.

( நிகழ்வில் நான் ஆற்றிய உரை)
கடந்த ஆண்டு வல்லினம் கலை இலக்கிய விழா 1 இதே அரங்கில் நடைபெற்றது. கொஞ்சம் கலகலப்போடும் கொஞ்சம் சர்ச்சைகளோடும்.

இம்முறை இவ்விழா ஏற்பாட்டில் மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகமும் இணைந்துள்ளது. இந்நாட்டில் எஸ்.பி.எம். தேர்வில், தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில் இக்கழகம் அமைக்கப்பட்டுச் செயல்படுகிறது. அதோடு இலக்கிய ஆசிரியர்களை, தமிழ் உணர்வாளர்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் வல்லினத்தின் இலக்கிய முயற்சிக்குத் துணைநிற்பதில் இக்கழகம் மகிழ்ச்சி அடைகிறது.

இந்நாட்டில் இலக்கியம் வளர்க்கும் பணியில் பல அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இதனை யாரும் மறுக்க முடியாது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கருத்தரங்குகள், பட்டறைகள், நூல்வெளியீடுகள், இலக்கியப்போட்டிகள், இலக்கியப் பயணங்கள் என ஒல்லும் வகையெல்லாம் பணியாற்றி வருகிறது. இன்று காலையில் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் சிறுகதைப் பயிலரங்கு நடைபெற்றது. அதில் சிறுகதை குறித்த பல அரிய தகவல்களை எழுத்தாளர் ஜெயமோகன் வழங்கினார். அதுபோல மாநிலந்தோறும் இருக்கும் எழுத்தாளர் சங்கங்கள், வாசகர் இயக்கங்கள், ‘மௌனம்’ ‘அநங்கம்’ போன்ற சிற்றிதழ்கள் தத்தம் சக்திக்கு இயன்ற வரையில் பங்களிப்பை வழங்கி வருகின்றன.

‘மௌனம்’ இதழ் மூலம் ஜாசின் தேவராஜன் கவிதைக்கான களம் அமைத்துக்கொடுத்துப் பலரையும் எழுதத் தூண்டி வருகிறார். அதே போன்று ‘அநங்கம்’ இதழ் மூலம் கே.பாலமுருகன் தம் இலக்கியப் பங்கினை ஆற்றிவருகிறார். இணைய வாகனத்தில் ஏற்றி உலகச் சந்தையில் நம் இலக்கியச் சரக்குகளை இடம்பெறச்செய்யும் முயற்சிகள் ஒரு சிலரால் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில், அண்மைய காலமாக வல்லின இணைய இதழின் பங்களிப்பும் இந்நாட்டு தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தவிர்க்க முடியாத, மறுக்க முடியாத ஒரு கூறாக விளங்கி வருகிறது.

மலேசியத் தமிழ் இலக்கியம் பன்முகங்கொண்டதாக மாறியுள்ளது. பழைய தடத்தில் மரபான இலக்கியங்களை கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவற்றைப் போற்றிக்காக்கும் முயற்சி ஒரு பக்கம் நடைபெறுகிறது. இன்னொரு பக்கத்தில் புதிய இலக்கிய முயற்சிகள் - பழைய தடத்தை மறுதலித்துவிட்டு புதிய இலக்கில் பயணப்படுகின்றன. அரசியல் போலத்தான்.. இனி ஒரு கட்சி என்ற நிலை மாறி பல கட்சிகளின் காட்சிகளைப் பார்க்கிறோம். அரசியலில் மாற்று அணி என்பதுபோல இலக்கியத்தில் மாற்று அணி. வல்லினத்தின் வருகையை நாம் அப்படித்தான் பார்க்கிறோம். இந்த இலக்கிய அணியின் பங்களிப்பு ஆக்கரமாக அமைய வேண்டும் என்பது நமது அனைவரின் எதிர்பார்ப்பாகும்

மாற்று அணி என்பதனால் மற்ற அணிகளைப் புறக்கணிக்க வேண்டியதில்லை. தமிழ் இலக்கணத்தில் வல்லினம் மட்டும் போதாது. மெல்லினமும் இடையினமும் தேவைப்படுகின்றன. மூன்று முரண்பட்ட ஒலிகள் இணைந்ததால்தான் அழகிய செம்மொழியை நாம் பெற்றிருக்கிறோம்.

அதுபோல், இலக்கிய வயலில் பலரும் இறங்கி, அவரவர் தம் ரசனைக்கு ஏற்ப, சக்திக்கு ஏற்ப, வாய்ப்புக்கு ஏற்ப, விருப்பத்திற்கு ஏற்ப விவசாயம் பார்க்கிறார்கள். அந்த பலதரப்பட்ட முயற்சிகளை வரவேற்போம்.

மலேசியத் தமிழ் இலக்கியத்தை ஓர் அங்குலமாவது உயர்த்தும் எந்த முயற்சியாக இருந்தாலும் எந்த இலக்கிய வடிவத்தில் அவை இருந்தாலும் அவற்றை வரவேற்போம்!

என்னுரை வரவேற்புரை. எனவே, இலக்கியச்சுவை நாடி வந்திருக்கும் அனைத்து உள்ளங்களையும் வரவேற்கிறேன். சிறப்பாக இணைய வாகனத்தில் இலக்கியப் பணியாற்றிவரும் வல்லினத்தைப் பாராட்டுகிறேன்.

No comments:

Post a Comment